இலங்கையில் தற்போது கொரோனா பரவலுடன் ஏற்படுகின்ற மரணங்கள் தொடர்பில் பார்க்கும் போது சமூக ரீதியில் தீவிரமாக பயணிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் ஹரித அலுத்கே,
கடந்த இரண்டு வாரங்களில் 16 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. முதல் அலையின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே நிகழ்ந்தன. எனினும் இரண்டு வாரங்களில் 16 மரணங்கள் பதிவாகியுள்ளன. அப்படி என்றால் நோய் பரவல் போன்றே மரணங்கள் தொடர்பில் தீவிர நிலையில் நாங்கள் பயணிப்பது தெரிவாகியுள்ளது.
தற்போது உயிரிழந்தவர்களில் சிலர், கொரோனா நோயாளிகள் என மரண பரிசோதனையிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்படி என்றால் சிலர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் அடுத்து வரும் வாரங்களில் வீடுகளில் அடையாளம் காணப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
PCR பரிசோதனைகளில் கொரோனா இல்லை என ஆரம்பத்தில் கூறப்பட்ட சிலருக்கு மரணத்தின் பின்னர் கொரோனா உறுதியாகியுள்ளது.
சமூக மட்டத்திலான மரணங்கள் மூலம் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் PCR பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்வது அவசியம் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் வீடுகளில் இருக்கும் வயோதிபர்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர். இதனால் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.