இலங்கையில் பிஸ்கட் வகைகளுக்கு தட்டுப்பாடு?

0

நாட்டில் பிஸ்கட் வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி.சூரியகுமார தெரிவித்துள்ளார்.

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி 20 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக பிஸ்கட் உள்ளிட்ட இனிப்புப் பண்ட உற்பத்தியின் கேள்வியில் 75 முதல் 80 வீதம் வரையிலேயே நிரம்பல் செய்ய முடிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மாதமொன்றுக்கு 12000 முதல் 15000 தொன் கோதுமை மா பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை அண்மைய நாட்களில் 41 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் விலை உயர்த்தப்பட்டால் பிஸ்கட், கேக் உள்ளிட்ட பண்டங்களின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என சூரியகுமார தெரிவித்துள்ளார்.

கோதுமை மா தட்டுபாடு காரணமாக உற்பத்தியை குறைக்க நேரிடும் எனவும், இதனால் பணியாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோதுமை மா மட்டுமன்றி சீனி, மாஜரின் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.