இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0

இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கடந்த தினம் வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபர் கடந்த மூன்று மாதக்காலமாக கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட நபராவார்.

அதன்படி, அங்கிருந்த கைதிகள் உட்பட 450 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், இன்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்டார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2151 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை 1979 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 894 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதுடன் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.