இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க தீர்மானம்

0

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கோவிட் அச்சுறுத்தல் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுடைய மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக அதி அச்சுறுத்தல் மிக்க கிராம சேவகர் பிரிவுகளை அடையாளம் காணுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள், கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ஆகியோருக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக அடையாளம் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுடைய மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க தொற்றுநோய் விஞ்ஞான பிரிவுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்படும் கிராம சேவகர் பிரிவுகளில், குறித்த வயதெல்லையில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் அதி அச்சுறுத்தல் மிக்க கிராமசேவகர் பகுதிகளில் தடுப்பூசிகள் வழங்கும் மையங்களில், அந்தந்த கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மாத்திரம் தடுப்பூசிகளை வழங்கப்படுவதை மையங்களுக்கு பொறுப்பான அதிகாரி கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.