இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணியில் வியாஸ்காந்த் …!

0

இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அண்மைக்கால பேசுபொருளாக காணப்படும் யாழ்பாணத்து மைந்தன் விஜயகாந்த் விஜாஸ்காந்த் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இலங்கை லெஜெண்ட்ஸ் மற்றும் இலங்கை அணியினருக்கிடையிலான சிநேகபூர்வ இருபதுக்கு இருப்பது கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் விஜாஸ்காந்த் தேர்வாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தை யாழ் மாவட்ட கிரிக்கெட் சபையின் தலைவர் ரதீபன் உறுதிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்காக கிரிக்கெட் ஆடிய சுழல் பந்து வீச்சாளரான விஜயகாந்த் விஜாஸ்காந்த் அண்மையில் இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஆடியவர்.

திசார பெரேரா தலைமையிலான ஜாப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக LPL போட்டிகளில் கலக்கி ரசிகர்களது கவனத்தை ஈர்த்தவர்.அத்தோடு இலங்கை சார்பில் இந்தியாவின் IPL போட்டிகளுக்கான ஏலப்பட்டியலிலும் தனது பெயரை பதித்தவர்.

ஏராளமான தேசிய வீரர்கள் IPL ஏலத்தில் தமது பெயரை பதிந்திருந்தாலும் இறுதியில் ஏலத்துக்கு இணைக்கப்பட்ட 9 பேர்கொண்ட குறும்பட்டியலில் விஜயகாந்த் விஜாஸ்காந்தும் ஒருவர் என்பதும் பெருமையே.

இந்தநிலையில் அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட லெஜெண்ட்ஸ் அணிக்கும் தற்போதைய வீரர்களைக் கொண்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ ஆட்டத்துக்கே இலங்கை அணியில் விஜாஸ்காந்த் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 4 ம் திகதி குறித்த போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான தொடர் மே மாதம் 3 ம் திகதி நிறைவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த நாளான மே 4 ம் திகதி இந்த கண்காட்சி இருபதுக்கு இருப்பது போட்டி இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

விஜாஸ்காந்தின் கிரிக்கெட் வாழ்வில் அடுத்த பரிமாணத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்வானது அடித்தளமிடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.