இலங்கை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்ற கடலாமைகள்

0

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன.

இந்நிலையில்  நேற்று (சனிக்கிழமை) அம்பாறை- பெரிய நீலாவணை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.

மேலும் பல ஆமைகள், கடலில் உயிரிழந்த படி அடைந்து வருவதாக கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில் கரையொதுங்கியுள்ள கடலாமைகளை, பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.