இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பலில் என்ன நடந்தது? மாலுமி வெளியிட்ட தகவல்

0

இலங்கை கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த நியூ டயமன்ட் கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டமை குறித்து, அங்கு பணியாற்றிய மாலுமி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பல நாட்களாக தொடர்ந்து தீ பற்றிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமி ஒருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்த பொறியியலாளர் எல்மோர், தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவைப் பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன்.

அங்கு நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சுமார் 15 நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு குளித்தேன்.

குளித்துவிட்டு வெளியேறிய போது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத் தாக்குவது போன்று உணர்ந்தேன்.

கப்பலில் ஒருபகுதி எரிவதைக் கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை. இருந்தும் இன்னும் நான் உயிர் வாழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.

குறித்த மாலுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வைத்தியர்கள் தாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

உண்மையில் இலங்கை மக்கள், இலங்கை கடற்படை, விமானப்படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியசர்கள், தாதிகள் ஏனையோர் என்னைப் பராமரித்த விதம் மிகவும் கவர்ந்தது. வீட்டிலும் அப்படி கவனிப்பு இருக்காது. அந்தளவிற்கு கவனித்தார்கள். நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.

27 ஆயிரம் மெற்றின் தொன் எரிபொருளை ஏற்றிச் சென்ற டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டிருந்தது. இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து தூரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.