இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களங்களுக்கு அருகில் காத்திருக்கும் மக்கள்

0

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பால் மா, சமையல் எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றைக் கொள்வனவு செய்ய மக்கள் வரிசையில் நிற்பதை அண்மைய காலமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில், தற்போது மற்றுமொரு வரிசை ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் காணக் கூடியதாக உள்ளது.

மழை, வெயில் பாராமல், காலையிலிருந்து நாள் முழுவதும், நாட்டிலிருந்து செல்லும் நோக்கில், தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்வதற்காக மக்கள் இந்த வரிசையில் நிற்கின்றனர்.

நாட்டில் காணப்படும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் தொழிலுக்குச் செல்ல தீர்மானித்துள்ளதாக இந்த வரிசையில் நின்ற பலர் கூறியுள்ளனர்.

தொடர்ந்தும் இலங்கையில் இருப்பது காலத்தை வீணடிக்கும் செயல் என்பதால், இலங்கையில் தமக்கு எதிர்காலம் இல்லை எனவும் எதிர்காலத்தை நினைத்து நாட்டிலிருந்து செல்ல தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள இளைஞர் ஒருவர், இலங்கையிலிருந்தால், தமது வாழ்க்கை நிலைமை மாறாது அப்படியே தொடரும் எனவும் இதனால், தொழிலுக்காக குவைத் நாட்டுக்குச் செல்ல தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.