இலாபம் தேடுவோருக்கு பதிலளிக்கமாட்டோம் – சம்பந்தன்

0

தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து தமிழ் தேசிய பத்திரிகைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிரதான கருமமாக கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய அவசிமில்லை.

நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை உரிய தருணங்களில் பயன்படுத்தியுள்ளோம். தொடர்ந்தும் பயன்படுத்துவோம். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமிருக்க முடியாது.

அந்தவகையில்தான் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்குள் பிரதமர் அனைத்து உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்தச்சந்திப்பில் நாம் கலந்து கொண்டோம்.

எமது மக்களின் சமகால நெருக்கடிகள், அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வுகள் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து குறிப்பிட்டு அறிக்கையொன்றையும் கையளித்திருந்தோம்.

அதனையடுத்து பிரதமருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது. இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுத்திருந்தோம். ஐந்து தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தினை தொடர்ந்தும் பின்பற்ற முடியாது.

அதன்மீதான மதிப்பும் மரியாதையும் இழக்கப்பட்டாகிவிட்டது. ஆகவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அமைவாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், தமிழ் மக்களின் இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதில் வேறுகாரணங்களைக் காட்டி தாமதப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சமாந்தரமாக ஜனநாயக பண்புக்களுக்கு மதிப்பளித்து சட்டத்தின் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்களை பிரதமரிடத்தில் பேசுவது தவறா? மேற்கூறிய விடயங்களுக்கு தீர்வு காண முயலாது இருக்க வேண்டுமா? நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.

ஆகவே எமது செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அப்பால் அவைபற்றிய சரியான புரிதல் பொதுமக்களுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டார்.