இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி?

0

இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா? என்பது தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் இல்லாத விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் தற்போது பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

நானும், இதுதொடர்பான எனது வாக்குமூலத்தை வழங்கினேன். இதன்போது, இஸ்லாம் அடிப்படைவாதம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நான் கூறினேன்.

விசேடமாக, 2019, மே மாதம் மஹிந்த ராஜபக்ஷ பேராதனை விகாரையொன்றுக்கு சென்றபோது, அங்கிருந்த விகாராதிபதி கெப்பட்டியாகொட ஸ்ரீவிமல நாயக்க தேரரிடம் கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.

அதாவது, இந்த அடிப்படைவாதிகளுக்கு அரச புலனாய்வாளர்களால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

அப்படியானால், யாருக்கு அந்த அரசாங்கம் சம்பளம் வழங்கி தகவல்களை பெற்றுக்கொண்டது, பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் எவ்வாறான தன்மையுடையவை என்பது தொடர்பாக விசாரணை செய்ய முடியும். இதனை விசேட விசாரணையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் நான் கோரியிருந்தேன்.

அதேபோல், ராஜபக்ஷவினர் காலத்தில் அவன்காட் நிறுவனத்தின் ஊடாக சர்வதேச கடற்பாதுகாப்புத் துறையினருக்கு, இலங்கையில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

எனவே, அவன் காட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்த ஆயுதப் பயிற்சியில் இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படைவாதிகளின் பின்னணியில் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் உள்ளார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதனால், இதுதொடர்பான விசாரணைகள் எந்தவொரு அரசியலுக்கும் உள்ளாகாமல் இடம்பெற வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.