ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு!

0

ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெறவிருந்த உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது. பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஆராதனை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்.

அந்த வகையில் இன்று பெரிய வியாழன் வழிபாடுகள் பிற்பகல் 4.45 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். நாளை பெரிய வெள்ளி வழிபாடுகள் பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.

சனிக்கிழமையன்று பாஸ்கா திருவிழிப்பு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். உயிர்த்த ஞாயிறு திருப்பலி காலை 7 மணிக்கு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.

இந்த நிகழ்வுகளுக்கு நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள பேராயர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர். எனினும் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது முதல் முதலில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் கடந்த 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக் கிளர்ச்சி காலத்தில் உயிர்த்த ஞாயிறு பூசைகள் அனைத்தையும் அரசாங்கம் தடை செய்தது.

அதன் பின்னர் இம்முறையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.