ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில்லை

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கையின் பிரதிநிதி நவ்பர் மொஹமட், வெடிகுண்டு தயாரிப்பாளர் மொஹமட் அன்வர் மற்றும் தாக்குதல் நடத்தும் இடங்களை தீர்மானித்ததாக கூறப்படும் அன்மத் மில்ஹான் ஆகியோருக்கு எதிராக அமெரிக்க சட்ட திணைக்களம் கடந்த 11 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது எனவும் அவற்றில் கூறப்பட்டிருந்தன.

பயங்கரவாத சந்தேக நபர்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக இந்த மூன்று சந்தேக நபர்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.