ஈஸ்டர் தாக்குதல் – பிள்ளையான் உட்பட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான், சுனில் ஹந்துன்நெத்தி, அகில விராஜ் காரியவசம், ஆசு மாரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர, திலும் அமுனுகம, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, மற்றும் A.H.M ஹலீம் ஆகியொருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை நாளை(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தினை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆசு மரசிங்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடம் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

அத்துடன், மங்கள சமரவீர மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் செப்டம்பர் 3ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, தமது அனுமதியின்றி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கோப் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினர்களை அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தான தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் விசேட அனுமதியின்றி, கோப் குழுவில் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எவரையும் அழைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அழைக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பிலும் இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.

அவ்வாறான அறிவித்தல் ஏதும் இதுவரை வௌியடப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து சுனில் ஹந்துன்நெத்தி சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள விடயம் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கு எழுத்துமூலம் பதிலளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கூறியுள்ளார்.