ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும்பின் தொடர்கின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்

0

நீண்ட காலமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகின்ற அரசியல் நிலைப்பாட்டையே தற்போது ஏனைய கட்சிகளும் பின்தொடர ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் ஆகியோருடன் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய – இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து மத்தியில் கூட்டாசி மாநிலத்தில் சுயாட்சி என்பதை ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்றது.

குறித்த இலக்கை 13 ஆவது திருத்தச் சட்டத்தை சரியாக செயற்படுத்துவதன் மூலம் படிப்படியாக முன்னேறுகின்ற வழிமுறையை வலியுறுத்தி வருகின்றது.

இதனைத் தான் தற்போது போலித் தழிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளும் கூற ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூறுகின்ற இரு தேசம் ஒரு நாடாக இருந்தாலென்ன, கூட்டமைப்பினர் கூறுகின்ற ஒருமித்த நாடாக இருந்தாலென்ன அவையெல்லாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதைதான் வேறுவேறு பெயர்களில் கூற ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இதனை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.