உணவு ஒவ்வாமையால் சிறுவன் உயிரிழப்பு: மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி- மட்டக்களப்பில் சம்பவம்

0

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் கணவாய் உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், இன்று (வியாழக்கிழமை) பகல் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி மாரியமன் கோயில் வீதியைச் சேர்ந்த தரம் 7 ஆம் ஆண்டில் கல்விகற்கும் 11 வயதுடைய அன்புதாஸ் கோகுல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பத்தினர், கடந்த சனிக்கிழமை வீதியால் வந்த மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாய் மற்றும் மீனை வாங்கி உயிரிழந்த சிறுவனின் தாயார், சகோதரன் ஆகியோர் தவிர ஏனைய 5 பேர் அன்று பகல் உணவாக சமைத்து சாப்பிட்டனர். இதனையடுத்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்தும் நோய் குணமடையாத நிலையில் கடந்த திங்கட்கிழமை குறித்த சிறுவன் மற்றும் சிறுவனின் அம்மம்மா, அப்பம்மா ஆகியோர் மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவல் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்பின்னர் இன்று சிறுவனின் தந்தையார், மாமனர் ஆகியோர் கணவாய் உணவு ஒவ்வாதையினால் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டனர். அதேவேளை, தீவிர சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று பகல் உயிரிழந்துள்ளார்.