உரிமை இல்லாத தமிழன் அடையாளம் இல்லாத தமிழனாக மாறிவிடுவான்! சாணக்கியன்

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிக்கு அப்பால் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழர் நலனில் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதிகூடிய விருப்பு வாக்கில் வெற்றிபெற்றுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான வெற்றி ஆரவாரங்களை தொடர்ந்து ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

2020ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு தமிழ் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட வேண்டும்.

நாம் உரிமை சார்ந்த அபிவிருத்திக்குள் மாத்திரம் தான் செல்ல வேண்டும். உரிமை இல்லாத அபிவிருத்தியை நாம் எப்போதும் ஏற்க முடியாது. உரிமை இல்லாத தமிழன் அடையாளம் இல்லாத தமிழனாக மாறிவிடுவான்.

எமக்கு அடிப்படை உரிமையாகத்தான் இருக்க வேண்டும். இதில் இளைஞர்களையும் இணைத்து பயணிக்க வேண்டும். இந்த நாடு தமிழனின் நாடு என்பதிலும் சம உரிமை அனைவருக்கும் உண்டு என்பதில் இருந்தும் பின்வாங்க கூடாது.

தற்போது அம்பாறையில் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு அநாதையாக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் தமிழ் மக்களின் இருப்பினை பற்றி நாம் பின்பற்றி செயலாற்ற வேண்டும்.

இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு ஆசனங்கள் பெற்றதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பாக நான் மட்டுமே தெரிவாகி உள்ளேன்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழரசு கட்சி உறுப்பினர்களையும் இணைத்து அடுத்த தேர்தலுக்கு நாம் எவ்வாறு முகம்கொடுக்க போகின்றோம் என ஆராய்ந்து நடவடிடிக்கைகளை முன்னெடுக்க உள்ளேன்.

எதிர்வரும் காலங்களில் திட்டங்களை தயாரித்து சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதுடன் தமிழரசு கட்சியின் கிளைகளை கலந்துரையாடி 2025ம் ஆண்டு தேர்தலில் சிறப்பான வெற்றிகளை பெற வேண்டும் என்பதுடன், வாக்களித்த தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி. விசேடமாக எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி.

33342 மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளார்கள். உங்களுடைய நம்பிக்கை வீண்போக முடியாத அளவிற்கு நான் செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.