வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலைங்கைக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டன், இந்தியா, டுபாய், மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் சிலரே இவ்வாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு இன்னும் ஆயிரம் பேர் வரையில் உட்படுத்தப்பட்டுள்ளனர். எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்னர் நாட்டு நிலைமை சுமுகமடைய வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு நிலைமை சுமூகமடைந்ததும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு படிப்படியாக அழைத்து வர முறையான திட்டமிடல் அவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.