உருவாகும் புதிய சூறாவளி – கிழக்கு மாகாணத்திற்கு ஆபத்தா?

0

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்ட தாழமுக்க நிலைமை, தற்போது வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வலுவடைந்துள்ள தாழமுக்கம், திருகோணமலையிலிருந்து சுமார் 750 கிலோமீற்றர் தூரத்தில் நிலைக்கொண்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் இந்த தாழமுக்கம், மேலும் வலுவடைந்து, அடுத்த 12 மணித்தியாலங்களில் அது சூறாவளியாக மாறும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2ஆம் திகதி அளவில் குறித்த சூறாவளி, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் ஊடறுத்து செல்லும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூறாவளி காரணமாக நாளை முதல் எதிர்வரும் 3ம் திகதி வரை கடும் மழையுடனான வானிலை கிழக்கு மாகாணம் மற்றும் கிழக்கு கடல் பிராந்தியத்தில் நிலவும் என எதிர்வு கூறப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியத்தில் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.