உலகில் கொரோனா வேகம் குறைகிறது – WHO தகவல்!

0

தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த நோய்த்தொற்று ஏற்படுபவா்களின் எண்ணிக்கையும், அதன் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், தென்கிழக்கு ஆசியா, மத்தியதரைக் கடல் பகுதிகளைத் தவிர, உலகின் மற்ற பகுதிகளில் அந்த நோய்த்தொற்று பரவலின் தீவிரம் தணிந்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இது, முந்தைய வாரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கையைவிட 4 சதவீதம் குறைவாகும். அந்த காலக்கட்டத்தில், கொரோனா நோய் பாதிப்பு காரணமாக 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

இதுவும், முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவாகும். கொரோனா நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பிரதேசமான தென்கிழக்கு ஆசியாவில், உலகின் 15 சதவீத கரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், உலக கொரோனா நோயாளிகளில் 28 சதவீத்தினா் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். அந்தப் பிராந்தியத்தில் இந்தியா அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலிகளை பதிவு செய்து வந்தாலும், நேபாளத்திலும் அந்த நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தைப் பொருத்தவரை, முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் புதிய கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம், அந்தப் பிராந்தியத்தில் கடந்த வாரம் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை கடந்த 6 வாரங்களாக தொடா்ந்து குறைந்து வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளிலிலும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கையும் முந்தைய வாரத்தைவிட கடந்த வாரத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், அந்த நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுளில் முந்தைய 3 வாரங்களாக கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த வாரத்தில் அந்த எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிடக் குறைந்துள்ளது.

மேலும், அந்தப் பிராந்தியத்தில் வாரந்தோறும் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.