உளவுப்பணிகளுக்கான செயலி இலங்கையில் பயன்படுத்தப்படுவது தொடர்பில் வெளியான தகவல்

0

உளவுப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செயலியான ‘பெகாசஸ்’ (Pegasus) இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்பம் வேகமாக முன்னேறி வருவதால், இலங்கையில் ‘பெகாசஸ்’ போன்ற மென்பொருள்கள் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இலங்கையை தளமாகக் கொண்ட எவரும் இந்த மென்பொருளை கொள்வனவு செய்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் தொலைத்தொடர்புகளை குறிவைக்கும் “பெகாஸஸ்” செயலியை இஸ்ரேலிய நிறுவனம் சர்வாதிகார அரசாங்கங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனம் உருவாக்கிய இந்த உளவு செயலி குறித்து இலங்கை அரசாங்கம் அறிந்திருப்பதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரசாங்கங்களும் இந்த செயலியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் மென்பொருளைப் பெறுவதற்கு முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் இதுபோன்ற உளவு செயலிகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும், நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.