ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே காணப்படுகிறது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தனது அரசியல் பயணத்தில் பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்த போதிலும் நேர்மையாகச் செயற்பட்டு தற்போது மிக முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சிற்கு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
ஊடகத்துறை சார்ந்தவர்களின் பிரச்சினைகளை வெவ்வேறாகப் பிரித்து அவதானிக்க வேண்டியதில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எனினும் தற்போது உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைச்சரவையினால் கூட தீர்மானங்களை எடுக்க முடியாது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய ஆணைக்குழுக்கள் சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே வாக்களிப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கக் கூடிய அதிகாரம் நேரடியாக தேர்தல்கள் ஆணையாளரையே சேரும்.
எனவே தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஊடகத்துறைசார்ந்தவர்கள் கோரிக்கையினை முன்வைத்தால் ஆணைக்குழு அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.