ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் அல்ல!- ஜனாதிபதியின் கருத்துக்கு அநுர பதிலடி

0

“ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு அதிகாரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடையாது.” என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை தோறும் கிராமங்களுக்கு சென்று மக்கள் குறை கேட்கிறார் என்ற போர்வையில் ஊடக பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார்.

அரசுக்கு எதிராக அந்தவாரம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வளமாக அதனை பயன்படுத்தி வருகின்றார். ஆக மக்கள் பிரச்சினைகளுக்கு செவிமடுக்காது, தான் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றார்.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போது, சில ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் இலக்கு வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.

‘எனக்குப் பாடம் கற்பிக்கத் தெரியும். படிப்பிக்க வேண்டிய விதமும் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நாட்டை ஆண்டாலும் எந்தவொரு ஊடகங்களுக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்மூலம் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய அதிகாரம் தனக்கு இருந்தும் அதனைப் பயன்படுத்தவில்லை என்பதையே ஜனாதிபதி கூறவிளைகின்றார்.

அத்துடன், ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளாராம். ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதி பத்திரமோ அல்லது வரப்பிரதாசமோ கிடையாது. அது ஊடகங்களுக்கான உரிமையாகும்.

அதேபோல் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எப்படி பாடம் கற்பிக்கப்பட்டது என்பது எமக்குத் தெரியும். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. தீயிட்டுக்கொளுத்தப்பட்டன.

லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். எக்னெலிகொட காணாமல்ஆக்கப்பட்டார். இப்படி பல அச்சுறுத்தலான பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஜனாதிபதி கற்பிக்கவுள்ள பாடம் என்பது நவீன ஊடகம் தொடர்பானதாக இருக்காது.

அது அச்சுறுத்தலாகவும், அழுத்தமாகவுமே அமையும். ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்ககூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்காது.

தனது நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் ஊடகங்களை அரவணைப்பதும், மக்கள் பக்கம் நின்று விமர்சிக்கும் ஊடகங்களை அச்சுறுத்துவதும் என இரட்டை நிலைப்பாட்டை ஜனாதிபதி கடைப்பிடிக்கக்கூடாது” – என்றார்.