ஊரடங்கு குறித்து அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

0

நாட்டில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துதல் மற்றும் விடுமுறை வழங்குவது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது. ஒருநாளில் குறைந்தது 10 பேர் வரையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் என மக்களிடையே அச்சம் நிலவி வருவதுடன், இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனையடுத்து, அவ்வாறான எந்த முடிவையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லையென ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துதல் குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் மீண்டும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், சமூகத்தில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.