ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

0

இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் கட்டம் கட்டமாக மற்றும் தளர்வுகளுடனான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் வரையில் நாட்டில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக அதிகரித்துள்ள போதிலும் இந்த தொற்று மக்கள் மத்தியில் பரவுகின்றமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படுபவர்களும் கடற்படையினருமே வைரஸ் தொற்றுக்கு இலக்காகுகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீடிக்குமா அல்லது தளர்த்தப்படுமா என்பது தொடர்பாக கேள்வி எழுந்திருந்தது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே ஊரடங்கு குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளார்.