கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் குறித்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைக்கு செல்லும் ஊழியர்களின் நலன் கருதி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் தனியார் துறையில் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பந்தப்பட்ட துறையினருடன் நேற்று கலந்துரையாடினார்.
இதன்போது, அனைத்து தனியார் துறை பேருந்துகளையும் இன்று முதல் சேவைகளை ஆரம்பிக்குமாறு தனியார் பேருந்து சங்கங்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைவாக பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையானது அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் அரச மற்றும் தனியார்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள பெயர் பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயில்களில் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.