கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமூக பரவலாக மாறும் அச்சுறுத்தல் இல்லை என்பதனாலும் நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டே ஊரடங்கை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி கூறியுள்ளார்.
இன்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நோய் தொற்றாளர்கள் சமூகத்தில் இல்லை என்றும் தற்போது கடற்படை அதிகாரிகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.
மேலும் தற்போது அடையாளம் காணப்பட்டுவரும் கடற்படை அதிகாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு மாதகாலமாக தொடர்ச்சியாக நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும் தொடர்ந்தும் நாட்டினை முடக்கிக்கொண்டு பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றும் கூறினார்.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் மக்கள் தற்போதைய சூழலை சரியாக கையாள வேண்டும் என்றும் நாடு திறக்கப்படுகின்றது என்ற காரணத்திற்காக மக்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி குணமடைந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.