பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் ஊழலில் ஈடுபடும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், அதனுடன் தொடர்புபட்ட மேலும் இருவர் தடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளிடமிருந்த போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வேன்கள், ஜீப் வண்டியொன்று, 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், கையகப்படுத்தப்பட்ட காணி, தங்காபரணங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்தும் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 25 பேர் கொண்ட மூன்று குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.