எச்சரிக்கையினையும் மீறி திறக்கப்பட்ட வர்த்தக நிலையம் மட்டக்களப்பில் சீல் வைக்கப்பட்டது!

0

மட்டக்களப்பு மாநகர சபையின் அறிவித்தலை மீறிய வர்த்தக நிலையமொன்றை மூடுவதற்கு சென்ற மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை வர்த்தகர் மிரட்டிய சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் நேற்று காலை 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது.

இந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பலசரக்கு நிலையங்கள், மருந்துக்கடைகள், பழம் விற்பனை நிலையங்கள் திறப்பதற்கான அனுமதிகள் மட்டுமே மட்டக்களப்ப மாநகரசபையினால் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மாநகரசபை ஆணையாளரையும் ஊழியர்களையும் மிரட்டிய நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.