எதிர்வரும் சனிக்கிழமை தீர்மானமிக்க நாள் – விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

0

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுபாடு நீக்கப்படுவது தொடர்பில் இதுவரையில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதே அதற்கு காரணமாகியுள்ளது.

இந்த நிலையில் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்குவதற்கு முன்னர் கொவிட் சமூக பரவல் தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் வீதிகளில் செல்லும் மக்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நோய் எந்த அளவு சமூகத்திற்கு பரவியுள்ளது என்பது தொடர்பில் சனிக்கிழமை வரை உறுதி செய்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீசீஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அவர் கூறியுள்ளார். அத்துடன் சனிக்கிழமை தீர்மானமிக்க ஒரு நாள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டினை மக்கள் மீறி செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றதென சுகாதார அமைச்சர் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதே முறையில் தொடர்ந்து பயணக்கட்டுப்பாடு மீறப்பட்டால் இன்னும் இரண்டு வாரங்கள் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க நேரிடும். எப்படியிருப்பினும் முன்பு அடையாளம் காணப்படும் நோயாளிகளை விடவும் தற்போது குறைவடைந்துள்ளது. எனினும் எண்ணிக்கையை மாத்திரம் பார்த்து இறுதி முடிவிற்கு வர முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.