எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன

0

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவர்களுக்கான பரிட்சைகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டதாக பேராசிரியர் அமரதுங்க மேலும் கூறினார்.

அத்தோடு இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படவுள்ளன என்றும் ஒரு அறைக்கு ஒரு மாணவர் என்ற ரீதியில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்த பேராசிரியர் அமரதுங்க அதே நேரத்தில் குறித்த மாணவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டப்படுவார்கள் என்றார்.

மருத்துவ பீடங்கள் மீண்டும் ஆரம்பிப்பதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை கருத்திற்கொண்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பிற பீடங்களை மீண்டும் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.