எனது கரங்கள் தூய்மையாகவே உள்ளன மற்றவர்கள் போல் கறை படியவில்லை- இரா.சாணக்கியன்

0

எனது கரங்கள் தூய்மையாகவே உள்ளன மற்றவர்கள் போல் கறை படியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே பலரும் எனக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இவர்களுக்கு நான் இவ்வேளையில் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனது கரங்களில் எவ்விதமான கறைகளும் இல்லை.

மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றேன். தேர்தலினை இலக்காகக்கொண்டு செயற்படுபவன் நான் இல்லை என்பது நான் நேசிக்கின்ற, என்னை நேசிக்கின்ற மக்களுக்கு நன்கு தெரியும்.

எனவே, என்னையும் என்னை நேசிக்கின்ற மக்களையும் பிரித்தாள நினைக்கும் உங்கள் கனவு ஒருபோதும் பலிக்காது. இதனை எதிர்வரும் 5ஆம் திகதி உணர்வீர்கள்.

அதேபோன்று, அரசாங்கத்துடன் இணைந்திருந்தால்தான் வேலைவாய்ப்பைப் பெறலாம், அபிவிருத்தியைக் கொண்டுவரலாம் என சிலர் தற்போது பூச்சாண்டி காட்டுகிறார்கள். அப்படியானால் வடக்கு கிழக்கில் இதுவரையிலும் யாரும் வேலைவாய்ப்பைப் பெறவில்லையா?

மக்களை ஏமாற்றும் அரசியலைக் கைவிட்டு மக்களை நேசிக்கும் செயற்பாடுகளையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் செய்தது. அதனையே தொடர்ந்தும் செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.