“என்னை பதவியில் இருந்து நீக்க சிறைச்சாலை சுவர்களுக்குள் பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது” – மைத்திரி

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹிங்குரக்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தான் முன்னெடுத்த போராட்டத்தை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது ஆட்சிக்காலத்திலேயே போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகள் வலுவாக இடம்பெற்றன. அவற்றை தடுப்பதற்காகவே தான் மரண தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தேன்.

இவ்வாறு போதைப்பொருளை ஒழிக்க நான் முன்னெடுத்த தேசிய ரீதியான வேலைத்திட்டம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், என்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் என்னை மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாக்கவும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலை சுவர்களுக்குள் பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனை புன்னாள் புலனாய்வு அமைப்பின் உறுப்பினர்களும் எனக்கு தெரிவித்துள்ளனர். இதேவேளை எனது ஆட்சியின் போது மகந்துரே மதுஷ் போன்ற மோசமான போதைப்பொருள் வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டதுடன் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்” என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.