என் மூச்சு உள்ளவரை மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்த உழைப்பேன் – இரா.சாணக்கியன்!

0

என் மூச்சு உள்ளவரை மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்த உழைப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – தாண்டியடி பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் எனது சுயநலம் சார்ந்து சிந்திப்பவன் இல்லை. கடந்த காலங்களில் நான் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாவட்டம் ழுமுவதும் செய்துள்ளேன்.

குறிப்பாக எமது எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையான உதவி திட்டங்களை வழங்கியுள்ளேன்.

இன்று, நேற்று அல்ல மிக நீண்ட காலமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்து வருகின்றேன்.

ஒருகாலத்தில் கற்றல் செயற்பாடுகளில் முன்னிலையில் இருந்த நமது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் இன்று  வீழ்ச்சி பாதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன.

உங்களுக்கு தெரியும், தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மிகவும் நுட்பமான முறையில் முன்னெடுத்து வருகின்றது.

இன்று கிழக்கு மாகாணத்தில், சில விடயங்களைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில், சிங்கள நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில், சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே, சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லை. இது தென்மாகாணத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய தாக்கமாகும். தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணி, கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டதற்குக் காரணம், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக ஆகும்.

இவ்வாறான எமக்கு எதிரான சதிகளை வென்றெடுக்க, நாம் நன்கு கற்ற சமூகமாக மாற வேண்டும். பலரும் கூறுகின்றனர் நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மக்களை மறந்து விடுவேன் என. இவ்வாறு கூறுபவர்களுக்கு இவ்விடத்தில் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

தமிழ் மக்களுக்கான எனது பயணம் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் நின்றுவிடப் போவதில்லை. குறிப்பாக மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தும் நோக்கிலான எனது பணி என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.