ஏறாவூரில் அமைதியின்மை: இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

0

மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்று முந்தினம் (03) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட குப்பைமேட்டிற்கு அருகிலுள்ள நீர்வரத்துப் பகுதி தொடர்பிலான கள ஆய்வொன்றை முன்னெடுப்பதற்காக உருகாமம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முந்தினம் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினரும் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது, இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கத்தின் பின்னர் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த அமைதியின்மையின் பின்னர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ஏறாவூர் தவிசாளர் சிகிச்சைகளின் பின்னர் வௌியேறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் நகர சபை தவிசாளர் மற்றும் ஏறாவூர் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர் உள்ளிட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.