சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூதாட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர் .
பிரம்படி லேன் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பரமலிங்கம் சரஸ்வதி வயது 66 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.
மேற்படி மூதாட்டி கடந்த மாதம் 28 ஆம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதன்போது சுன்னாகம் பகுதியில் தெரு நாய் ஒன்று குறுக்கே வந்ததால் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
பின் இருக்கையில் இருந்த மூதாட்டி இடறி அடிபட விழுந்து அதன் காரணமாக தலையில் காயம் அடைந்தார். உடனடியாக அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்தார்.
இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இறப்பு விசாரணை இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .