ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் கிராம சேவையாளர்கள் மீண்டும் இணைவு!

0

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களைத் தெரிவுசெய்து 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் திட்டம் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்காக வட்டார பிரதிநிதி, கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட 5 அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை பிரதமர் சுற்றுநிரூபம் மூலம் அறிவித்தார்.

எனினும் கடந்த 15 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் மற்றுமொரு சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காத்திருப்புப் பட்டியலில் 19 இலட்சம் குடும்பங்கள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் விண்ணப்பங்களை கோருவதன் மூலம் பட்டியல்களை மீளாய்வு செய்யுமாறு மற்றுமொரு சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டது.

இந்த பின்புலத்திலேயே 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.