ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு

0

நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம்  பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது.

எனினும் தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு வழங்குவதனை இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த நியமனத்தில் யாழ்ப்பாணத்தில் 6 ஆயிரத்து 626 பேரும்  கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 261 பேரும்  மன்னாரில் ஆயிரத்து 830 பேரும்  முல்லைத்தீவில் ஆயிரத்து 565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு, வவுனியாவில் ஆயிரத்து 258 பேரும் நியமிக்கப்படவிருந்தனர்.

இவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையிலையே அதனை இடை நிறுத்துமாறு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கும் தொழில்வாய்ப்பு இன்றி காணப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு அமைய 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு பெற்றவர்களின் பெயர் விபரங்கள் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

மேலும் ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு தெரிவிற்கு நாடளாவிய ரீதியில் வறிய குடும்பத்திலிருந்து  தெரிவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.