ஒரு பகுதியில் மாத்திரம் 45 கர்ப்பணித் தாய்மார்களுக்கு கொரோனா

0

இலங்கையில் 2ஆவது கொவிட் அலை பரவ ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையான காலம் வரை களுத்துறை – பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 45 கர்ப்பணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட பிரதேச சுகாதார வைத்திய சேவை பணிப்பாளர் டொக்டர் உதய ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

களுத்துறை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 10 கர்ப்பணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 130 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அட்டுலுகம பகுதியில் மாத்திரம் இதுவரை 734ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக எல்லைக்குள் இதுவரை 875 கொவிட் தொற்றாளர்கள் இதுவரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டுலுகம பகுதியில் ஒரு சில தரப்பினர் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு முன்வராமையானது, பாரிய பிரச்சினையாகியுள்ளதாக அவர் மேலும் கூறுகின்றார்.

அதனால், குறித்த நபர்களின் வீடுகளுக்கு அருகிலேயே சென்று, பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தும் நடவடிக்கை கடந்த வெள்ளிகிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.