ஓய்வு பெற்ற தாதியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு

0

சப்ரகமுவ மாகாணத்தில் ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

தெரணியகலை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதற்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நேற்று முன்தினம் மேற்படி வைத்தியசாலைக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 218 வைத்தியர்களுக்கான வெற்றிடங்களும் மற்றும் 332 தாதியர்களுக்கான வெற்றிடங்களும் நிலவி வருகின்றன . சப்ரகமுவ மாகாணத்தில் தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

மருத்துவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற வைத்தியர்கள் மற்றும் உதவி வைத்திய அதிகாரிகளை தற்காலிகமாக சப்ரகமுவ மாகாணத்திற்கு சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அத்தோடு வைத்தியத்துறையில் ஓய்வு பெற்ற இராணுவ வைத்தியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ தாதியர்களையும் சப்ரகமுவ மாகாண வைத்தியசாலைகளுக்கு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.