நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் பிரதமர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா?
பதில்: அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாது. நாடு பாதுகாப்பாக உள்ளது. பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்.
கேள்வி: விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?
பதில்: கொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டே அதனை செயற்படுத்த வேண்டும். நாம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலைமை என்பவற்றை கருத்திற் கொண்டு அவதானம் செலுத்தியுள்ளோம்.