கட்டாய தகனம்: இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம்

0

கட்டாய தகனம் குறித்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ளாதது இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்பானது, முஸ்லிம்களின் மத உரிமைகளை கொடூரமாக மறுத்த கொள்கையின் முடிவாக அமைந்தது என தெற்காசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உறுதிமொழி வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கம் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்து வருகிறது என்றும் நிபுணர் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்தே முடிவை அறிவிக்க முடியும் எனக் கூறி தற்போது பின்வாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அனுமதித்துள்ளபோதும் இலங்கை அரசாங்கத்தின் குறித்த முடிவுக்கு ஐ.நா. மனித உரிமை வல்லுனர்களும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் கண்டித்துள்ளன.

பெப்ரவரி மாதம் 22 ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜெனீவா அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினரான பாகிஸ்தானின் ஆதரவைப் பெற இலங்கை ஆர்வமாக உள்ளது என மீனாக்ஷி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய தீர்மானத்தை பேரவை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்டாய தகனம் குறித்த விடயத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ளாதது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.