கண்கள் சிவப்பதும் கொரோனா அறிகுறியாக இருக்கலாம்!

0

இருமல், காய்ச்சல் போல் கண்கள் சிவப்பதும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கனடா நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஆல்பா்டா மாகாணத்திலுள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டு சிவந்த நிலையில் 29 வயது பெண் கடந்த மாா்ச் மாதம் வந்தாா். அவருக்கு பல நாள்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, கரோனோ பாதிப்புக்குள்ளான ஆசிய நாட்டிலிருந்து வந்திருந்த அந்தப் பெண்ணுக்கு, அந்த நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டும் அந்தப் பெண்ணுக்கு இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

ஆனால் அதற்குப் பதிலாக அந்தத் தீநுண்மி கண்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 10 முதல் 15 சதவீதத்தினருக்கு, இரண்டாம் நிலை அறிகுறியாக கண் எரிச்சல் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

ஆனால், இருமல், காய்ச்சல் இல்லாமலேயே அந்தப் பெண்ணுக்கு கரோனா அறிகுறியாக கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எரிச்சலில் கண்கள் சிவப்பதும் கரோனா நோய்க்கான அறிகுறியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கருதுகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.