கண்டி எசல பெரஹெராவைத் தாக்குவதே சஹ்ரானின் பிரதான திட்டம்!

0

கண்டி எசல பெரஹெராவைத் தாக்குவதே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரா ஹாஷிமின் பிரதான திட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

21 ஏப்ரல் 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019 ஜனவரி 16 ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4, 2019 அன்று, சஹரான் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும், பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

இந்த தாக்குதலை தடுக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர், சஹ்ரா மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் ஏப்ரல் 20, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நியாயப்படுத்தும் உறுதிமொழியை எடுத்துள்ளனர்.

இதனிடையே, மட்டக்களப்புக்கு தெற்கே 4 கி.மீ தொலைவில் உள்ள காத்தான்குடி நாட்டின் தனித்துவமான ஒரு முஸ்லிம் நகரம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

முஸ்லிமல்லாதவர்கள் காத்தான்குடியில் வாழவோ, சொத்து வாங்கவோ அல்லது ஒரு வணிகத்தை நடத்தவோ முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின்படி, காத்தான்குடியில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 65 மசூதிகள் உள்ளன, மேலும் இப்பகுதியில் சுமார் 50,000 முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்த நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மற்ற நகரங்களிலிருந்து வேறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 21 ஏப்ரல் 2019 அன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.