கண்ணாம்பூச்சி காட்டி சாராவை மறைக்கவே உபகுழு – முஜிபுர் ரஹ்மான்

0

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை தொடர்பான அறிக்கையை வைத்துக்கொண்டு, கண்ணாம்பூச்சி விளையாட வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அவ்வறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அனுப்பி, அதிலுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவை ஆராய, அரசியல்வாதிகளைக் கொண்ட மற்றொரு குழுவை நியமித்து ஆராய்வதில் எவ்விதமான சுயாதீனமும் இல்லையெனத் தெரிவித்த அவர்,

அரசாங்கத்தைத் தொடர்ந்து கொண்டு நடத்தவும் தமக்குத் தேவையானவர்களைக் காப்பாற்றவும் தமக்குத் தேவையானவற்றை மறைப்பதற்காகவுமே உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியே, மேற்கண்டவாறு கருத்துரைத்த அவர், மேலும் தெரிவிக்கையில், ‘எமக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் இருக்கும் நம்பிக்கையைச் சீர்குலைக்கம் நடவடிக்கையே இந்த உபகுழு மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதனூடாக யார், யாரையோ காப்பாற்றுவதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எமக்குள்ளது.

எனவே, உபகுழு வேண்டாம்; அறிக்கையை உடனடியாக சட்டமா அதிபரிடம் கையளிக்கவும்’ எனக் கோரிநின்றார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், சாரா எனப்படும் புலஸ்தினியின் பங்களிப்பை மறைப்பதற்காகவா இந்த உபகுழு அமைக்கப்பட்டது என்ற சந்தேகம், தற்போது வலுப்பெற்றுள்ளது என்று தெரிவித்த அவர், உபகுழுவின் உறுப்பினர்களில் பலர், பாரிய குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்தவர்கள் அந்தக்  குற்றச்சாட்டுகளில் இருந்து கூட, அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எனவே, இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை, இந்தக் குழுவில் நியமித்தமை, அந்த நிபுணர் குழுவை அவமதிப்பதாகவே நாம் கருதுகிறாம் என்றார்.

எனவே, இந்தக் குழு அவசியமில்லாத ஒன்று. இது அரசியல் இலாபத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவென்றும், இந்த அறிக்கையைத் தாமதப்படுத்துவதன் ஊடாக, அறிக்கையிலுள்ள பக்கங்கள் கிழிக்கப்படவோ, அகற்றப்படவோ கூடாது என்றார்.