கம்பஹா, திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அவரது 16 வயதுடைய மகளுக்கும் கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் நேற்று அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களின் பின்னரே இவ்வாறு சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி சுகயீனமடைந்த குறித்த பெண் தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்றுள்ளார் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பின்னர் கடந்த 30ஆம் திகதி சுவாச பிரச்சினை காரணமாக குறித்த பெண் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றரை நாளின் பின்னர் அவரது உடல் முன்னேற்றம் ஏற்பட்டமையினால் வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டது.
எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் தற்செயலாக அவருக்கு PCR பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே அந்த பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியமை எவ்வாறு என இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான இந்த பெண்ணின் கணவன் வாடகை முச்சக்கர வண்டியின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.
அவர்களின் நான்கு பிள்ளைகளில் ஒரு மகன் மற்றும் மகள் திவுலபிட்டிய பாடசாலைகள் இரண்டில் கல்வி கற்று வருகின்றனர்.
8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மகன் முதல் விடுமுறைக்கு பின்னர் இன்னமும் பாடசாலைக்கு செல்லவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி கடந்த வெள்ளிக்கிழைமை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் சனிக்கிழமை தடுமன் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த மாணவியின் தாய் பணியாற்றும் தொழிற்சாலையில் 800 பேர் பணியாற்றுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் தொழிற்சாலை பேருந்து சேவையிலேயே தினமும் பணிக்கு சென்றுள்ளார்.
அந்த பேருந்தில் பயணிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30ஆம் திகதி வரையிலும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.
அவர் அதுவரையில் நெருங்கி பழகியவர்கள் விடுமுறை பெற்று நாட்டின் பல பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் 600 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் கொரோனா தொற்றியமை உறுதியானதும் இந்த பெண் உரிய தகவல்களை வழங்காமையினால் பழகியவர்களை கண்டுபிடிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.