கருணாவின் ஆனையிறவுப் பேச்சு பாரதூரமானது

0

ஆனையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கருணா என்ற புலி உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. 1977 முதல் ஆனையிறவை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பாதுகாத்தது.

2000ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியின்போதே ஆனையிறவு வீழ்ந்தது. இவ்வாறு ஆனையிறவு வீழ்ந்தபோது ஒரேநாளில் 2 ஆயிரம் படையினரைக் கொன்றதாக கருணா அம்மான் அறிவித்துள்ளார்.

இது குறித்து எமக்குக்கூட தெரியாது. அப்படியானால் இந்த நாட்டில் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.

2000 பேரை எப்படி 24 மணிநேரத்துக்குள் கொல்வது? அப்படியெனில் அங்கு அப்பட்டமாக மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்க வேண்டும்.

2000பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை தற்போதுதான் அறிகின்றேன். உண்மையிலேயே என்ன நடந்துள்ளது? நாட்டுக்கு தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளனவா அல்லது சூழ்ச்சியா?

இராணுவத்தில் இருந்த ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். அவருக்கு இராணுவத்தின் மீது பற்றுள்ளது.

எனவே, இவை தொடர்பாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொள்கின்றது.

கருணா அம்மானிடமும் விசாரணை நடத்தப்பட்டு என்ன நடந்தது என்பது அறியப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.