கர்ப்பிணி சுகாதார ஊழியர்கள் ஆபத்தில் உள்ளனர்! – சமன் ரத்னபிரிய

0

கர்ப்பிணி சுகாதார ஊழியர்கள் கோவிட் நோய்த் தொற்றாளர்களாக மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொது சேவையில் ஈடுபடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தொற்றுநோய்களின்போது கடமைக்கு சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்ட நிவாரணம் இதுவரை சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என நாட்டின் முன்னணி தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரச தாதியர் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னபிரிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமைச்சர்களுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்ட போதிலும், கர்ப்பிணி சுகாதார ஊழியர்களை கடமைக்கு அழைக்க வேண்டாம் என்ற சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என தொழிற்சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“சில சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதைச் செய்வது கடினம் என கூறுகிறார்கள், மேலும் பல கதைகள் கூறப்படுகின்றன. இன்றுவரை, கர்ப்பிணிப் பெண்கள் குறித்த சுற்றறிக்கை சுகாதாரத் துறையில் வெளியிடப்படவில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் கூறியுள்ளார். “கர்ப்பிணி தாதியர்கள் பொதுவாக வைத்தியசாலைகளில் தொடர்ந்து பணியாற்றுகின்றார்கள்.

கர்ப்பிணி வைத்தியர்கள், கர்ப்பிணி சுகாதார ஊழியர்கள், சிற்றூழியர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து பணியாற்றுகின்றார்கள், அவர்கள் ஆபத்தில் உள்ளனர்.”

கர்ப்பிணி தாதியர்கள் ஏற்கனவே கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும், சமன் ரத்னபிரிய, பொது சேவைக்கு வழங்கப்படும் நிவாரணத்தை ஏன் சுகாதார சேவைக்கு வழங்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, ”பொது சேவையை தடையின்றி முன்னெடுத்தல்” என்ற தலைப்பில் மே 10ஆம் திகதி வெளியிட சுற்றறிக்கையில், அரச நிறுவனங்களுக்கு அதிகாரிகளை அழைக்கும் போது கர்ப்பிணிகளை சேவைக்கு அழைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

தொற்று நோயின் மூன்றாவது அலையின்போதும் தொற்றாளர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிப்பதில் முன்னணியில் இருக்கும் நாயகர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.