கல்முனையில் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்- ரோந்து நடவடிக்கையில் இராணுவம்

0

கல்முனை செய்லான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையிலான சுகாதார பிரிவினர் குறித்த பகுதியை சென்ற பார்வையிட்டுள்ளனர்.

கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்று(திங்கட்கிழமை) இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை  கல்முனை பொதுச்சந்தை, கல்முனை பஸார், கல்முனை பிரதான வீதியிலுள்ள வர்த்தகர்களுக்கு மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.