கல்முனையில் விலைக் கட்டுப்பாடுகள் குறித்து இறுக்கமான நடவடிக்கை!

0

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மொத்த வியாபாரிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் சம்பந்தமாக தெளிவூட்டும் உயர்மட்டக் கூட்டம் கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நுகர்வோர் அதிகார சபையினால் விதிக்கப்பட்ட விலைகளுக்கு அமைவாக பொருட்களை விற்பனை செய்யவேண்டும் என்றும், மொத்த வியாபாரிகளிடம் இருந்து பற்றுச்சீட்டு பெறாத எந்தவொரு சில்லறை வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்யமுடியாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், தங்களின் வியாபாரத் தளங்களில் பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படல் வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களினால் மொத்த வியாபாரிகளுக்கு தெளிவூட்டல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலத்தில் மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் நிர்ணய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் குறிந்த வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் பதிவேற்றப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரத்திற்கு உட்பட பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.