கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

0

ஈழத்து திருச்செந்தூர் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்  கொடியேற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.

கிழக்கு இலங்கையின் நீண்ட வரலாற்றினைக் கொண்ட இந்த ஆலயமானது மகாதுறவி சுவாமி ஓங்காரானந்தா சரஸ்வதியினால் உருவாக்கப்பட்டு ஒரு சித்திர் பீடமாக அருள் பாலித்து வருகின்றது.

இலங்கையில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் தமிழ் முறைப்படி வேதங்கள் ஓதப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வுகளும் ஆகம விதிகளுக்கு அப்பால் பக்தர்களும் இணைந்து கொடியேற்ற நிகழ்வினை நடத்துவது சிறப்பாகும்.

நேற்று (திங்கட்கிழமை) மஹா யாகம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்று மூலஸ்தானத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு ஆலய உள்வீதி உலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடித்தம்பம் அருகில் தமிழில் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றத்தினை தொடர்ந்து முருகப் பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

10 தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி தேர் உற்சவமும் 16 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.கொடியேற்ற மஹோற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்து கொண்டனர்.